நான் ஷீலா ரமணன். 2024 -2026 பேரவையின் இயக்குநராகப் பொறுப்பேற்க தேர்தல் களத்தில் தங்களின் வாக்குகள் வேண்டி உங்களை சந்திக்க வந்துள்ளேன்.
பத்து வருடங்களாக மிக மிக ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் தமிழ் சார்ந்த பணிகள் செய்வதற்கு எனக்குக் கிடைத்த வழிகளுக்கும் வாய்ப்புகளுக்கும் அதற்குக் காரணமாக இருந்தவர்களுக்கும் முதலில் நன்றி கூறிக்கொள்கிறேன்.
சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கத்தில் 2015 ஆம் ஆண்டிலிருந்து ஓர் தன்னார்வலராக முதல் படி எடுத்து வைத்து, அவ்வருடமே அனைத்து விழாக்களையும் மேடையில் தொகுத்தளிக்கும் வாய்ப்பினைப் பெற்று நம் மக்களுடன் இணைந்தேன். அன்றிலிருந்து இன்று வரை மழலையும் மகிழ்ச்சியும் போல இரண்டறக் கலந்து விட்டேன்.
அனைத்துத் தலைவர்களும் என் மேல் நம்பிக்கை வைத்து எனக்கு அளித்த அனைத்துப் பொறுப்புகளையும் திறம்பட முடித்துக் கொடுத்து அடுத்த பொறுப்புகளுக்கு என்னை வளர்த்துக் கொண்டது இன்று பெரும் பயனாகவே கருதுகின்றேன்.
நான் ஆற்றிய செயல்களை சுற்றறிக்கையில் குறிப்பிட்டுளேன். வட அமெரிக்காவில் சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கத்தின் 'மல்லிகை மலர்' பலரின் கவனத்தை ஈர்த்தது மட்டுமன்றி பிற சங்கங்கள் எங்களைப் போலவே காலாண்டு மலர்கள் வெளியிட வேண்டி விரும்பிக் கேட்டது மிகவும் மன மகிழ்வைக் கொடுத்தது. அவ்வகையில் உள்ளூர் மக்களின் திறமைகளை வெளிக்கொணர முடிந்தது எண்ணி பேருவகை அடைகிறேன்.
எல்லாக் காலங்களிலும் பெண்களை வெளியே கொண்டுவர என் மனம் எப்போதும் விரும்பும், அதற்காகவே நிறைய கலந்துரையாடல்கள் நடத்தி அவர்களை மனம் விட்டுப் பேசச் செய்து வருவது எனது வெற்றியாகவே பார்க்கின்றேன்.
2024 ,இவ்வருடம் மார்ச் 8 ஆம் தேதி 'மகளிர் குழு' வெற்றிகரமாகத் துவங்கியுள்ளோம். தொடர்ந்து பல சந்திப்புக்கள் நடத்தி அவர்களின் தேவைகள், விருப்பங்கள் அறிந்து உதவிகள் செய்ய முடிவெடுத்துள்ளோம். இதில் என் பங்கும் உள்ளது என்பது எனக்குப் பெருமையே!
ஒரு சிறு தொட்டியில் இருந்து பூத்த இம்மலர், தகுந்த வாசத்தைத் தரமுடிகிறது எனும்போது, பேரவை என்னும் பெரும் பண்பட்டத் தோட்டத்தில் பெரும் பூக்களாகப் பூத்தால் வட அமெரிக்கா முழுவதும் வாசம் தரலாம் எனும் நம்பிக்கையில் பேரவையின் இயக்குநர் குழுவில் இணைய ஆசைப்படுகின்றேன்.
2017 இறுதியில் நான் பேரவைக்கு அறிமுகம் ஆனேன். 2018 ஆம் ஆண்டின் பேரவை மலரில் ஆசிரியர் குழுவில் இணைந்தேன், அன்று ஆரம்பித்த என் பயணம் பல உயரங்களைச் சந்தித்தது.
தொடர்ந்து பல குழுக்களின் அறிமுகங்கள்! வணக்கம் வட அமெரிக்கா- ஓவியப்போட்டிகள், குறும்படப் போட்டிகள், பின் வருடங்களில் 'அருவி' மலரின் இணையாசிரியர், 'மயிலே-மயிலே, 'ஆற்றல்மிகு பெண்கள் குழு' எனத் தொடர்ந்தன என் பணிகள்!
இதனிடையில் டிஜிட்டல் மீடியாக்களில் எனக்குப் பிடித்த வேலையான 'நேர்காணல்கள்' செய்ய முடிந்ததால் பல திறமைசாலிகளையும், தன்னார்வலர்களையும் வெளிஉலகிற்குப் பெருமையுடன் காட்ட முடிகிறது. தொடரும் என் பணி என்பது உறுதி.
எனது நிகழ்ச்சியின் பெயர்- 'மனம் திறந்து'.
என் எதிரே வந்தமரும் மதிப்புமிக்க விருந்தினர்கள் எவ்வித தயக்கங்களும் இன்றி மனம் திறந்து உரையாட வேண்டும் என்பதே என் விருப்பம். அவ்வாறே பலவித துறைகளைச் சார்ந்த சிறப்பு விருந்தினர்களை சந்தித்துள்ளேன். கனடாவை தளமாகக் கொண்ட TET -தமிழ் என்டர்டைன்மெண்ட் டெலிவிஷனில் 50 நேர்காணல்களை ஒரே வருடத்தில் முடித்தேன்.
தற்சமயம் நியூஸிலாந்து 'அரசன் டிவியில்' என் மனத்துக்குப் பிடித்த இவ்வேலையை கிடைக்கும் நேரங்களில் செய்து வருகிறேன்.
எவ்வித பாரபட்சமில்லாமல் இதுவரை நடந்து செயலாற்றிய என்னால் தொடர்ந்து மேலும் பல நல்ல முயற்சிகளை சிறப்பாகச் செய்ய முடியும் என நம்பிக்கை அளிக்கின்றேன் நீங்கள் வாக்களிப்பீர் எனும் நம்பிக்கையைப் போல!
நம் மனதில் குடியிருக்கும் திரு அப்துல் கலாம் ஐயா கூறியது போல "நீ தூக்கத்தில் காண்பது கனவல்ல, எது உன்னைத் தூங்கவிடாமல் செய்கிறதோ அதுவே உன் கனவு".
நல்ல கனவுகளை நிஜமாக்குவோம், ஒன்றாய் கை கோர்ப்போம்!
பேரவையின் 2024-2026 இயக்குநர் குழுவில் இணைந்து செயல்பட தங்கள் வாக்குகளை அளிக்க வேண்டுகிறேன். நன்றி! வணக்கம்!
சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கத்தில் ஆற்றிய பணிகளின் அனுபவங்களிலிருந்தும், கற்றுக்கொண்ட பாடங்களிலிருந்தும் அடுத்துப் பேரவையில் கிடைக்கப் போகும் இந்த அருமையான வாய்ப்பில் அன்புடனும், அறத்துடனும் மக்களின் திறமைகளில் தொடங்கி, பேரவையின் ஆன்றோர்-சான்றோர்களின் ஆலோசனைகளையும் கடைபிடித்து பல சங்கங்களோடு உறவாடி அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முயல்வேன்.
சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கம்:
• 2024-மகளிர் தினத்தன்று SA Women forum ‘சான் ஆண்டோனியோ மகளிர் குழு’ துவங்கியது.
• 2023 முதல் 'மொழியியல் மற்றும் மீடியா இயக்குநராகப் பணி.
• 2019 - 2022 சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராகப் பணி.
• 2018 - தமிழ்ச் சங்கத்தின் அடையாளமாக இன்று நிலைத்து நிற்கும் 'மல்லிகை மலர்’ எனும் வருடத்திற்கு மூன்றாக வெளிவந்து கொண்டிருக்கும் இதழ் துவங்கியதிலிருந்து இன்றுவரை ஆசிரியராகப் பணி.
• 2016 -2017 சங்கத்தின் அனைத்து விழாக்களிலும் பங்களிப்பு.
• 2015 முதல் தன்னார்வலர் பணி:
• அன்றிலிருந்து இன்றுவரை (2024 ) நடந்த பல நிகழ்வுகளின் மேடைத் தொகுப்பாளினி.
மற்ற பங்களிப்புகள்:
• 2018 ல் முதன்முறையாக 'பாரதியார் விழா' டிசம்பரில் தொடங்க உறுதுணையாக இருந்தது.
• பல செய்தித் தொடர்பு நிறுவனங்களுக்கு சங்கத்தின் நிகழ்வுகளை செய்திகளாக அனுப்பிக் கொண்டிருப்பது.
• சங்கத்திற்கு வரும் விருந்தினர்களை நேர்காணல் காண்பது.
• பட்டிமன்றங்கள், கலந்துரையாடல்கள், கருத்துக் களங்களில் பங்கேற்பு.
• 'குறளுக்கோர் டாலர்' என குழந்தைகளுக்கு திருக்குறள் மனனப் போட்டிகள் நடத்தியது.
பேரவையில் பங்களிப்பு:
• 2023 -2024 பேரவையின் காலாண்டு மலரான 'அருவி' மலரின் இணை ஆசிரியராக பணி.
• 2023 -சாக்ரமென்டோ பேரவை விழாவில் 'கருத்துக்களத்தில்' பங்கேற்பு.
• 2019 -2022 வரை பேரவையில் சில குழுக்களில் இணைந்து பணியாற்றியது.
(உ -ம்) வணக்கம் வட அமெரிக்காவின் ஓவியம் மற்றும் குறும்படக் குழுவில் பணியாற்றியது.
• 2018 பேரவை மலரின் ஆசிரியர் குழுப் பணி (டல்லாஸ் பேரவை விழா)
• ஆற்றல் மிகு பெண்கள் அணியில் உறுப்பினராகவும், நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும் செயல்பட்டுக் கொண்டிருப்பது.
• பேரவையின் 'மயிலே-மயிலே' குழுவின் உறுப்பினர் மற்றும் தொகுத்து வழங்குதல்.
பிற பங்கேற்பு: ( Tamil Nadu Foundation )
* 2024 சிகாகோ தமிழ்ச் சங்கம் நடத்திய 5 ஆவது உலகத் திருக்குறள் மாநாட்டுப் பயிற்சிப் பட்டறையின் பயிற்சியாளர்களில் ஒருவராகப் பணி.
• 2024 செய்தியாளருக்கான பணிக்காக பொன்விழாக் காணும் ஹூஸ்டன் பாரதி கலை மன்றம் வழங்கிய பாராட்டு பதகை.
• 2024 - பொன்விழா காணும் TNF ஆண்டு மலரில் மீண்டும் எடிட்டோரியல் குழுவில் பணி.
• 2022 - 'தமிழ்நாடு அறக்கட்டளை' (TNF) நிறுவனத்தின் 48 ஆவது ஆண்டு மலரில் ஆசிரியராகப் பணி. மலர் வெளியீட்டு நிகழ்வை தொகுத்து வழங்கியது.
* 2021 ஹூஸ்டன் தமிழ் இருக்கைக்கான நிதிதிரட்டும் நிகழ்வை தொகுத்தளித்தது.
• தன்னார்வலராக வட அமெரிக்கா முழுவதும் நடக்கும் தமிழ் மற்றும் தமிழர்கள் சார்ந்த நிகழ்ச்சிகளை செய்தித் தொடர்பு துறை மூலம் வெளி உலகிற்கு கொண்டு செல்லுதல்.
• தொலைக்காட்சி மற்றும் ரேடியோ பணி மூலம் நேர்காணல் காணுதல் மற்றும் வாராவாரம் ஊக்கப்படுத்தும் உரையாடல்கள் வழங்குதல்.
எழுத்தாளர் பணி-
• சிறுகதைத் தொகுப்புகள் சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்க மேடையில் வெளியிட்டது, பயணக்கட்டுரைகளும் வெளியிட்டுக் கொண்டிருப்பது.
“எண்ணித் துணிக பெண்ணியம் ஓங்க!
பெண்ணியம் ஓங்க, எண்ணித் துணிக!”